இதைப் பற்றி


நானும் சாதாரண மனிதன்தான். மிக சாதாரண மனிதன். சரி அது என்ன மிக சாதாரண மனிதன். நான் இப்படிதான் கேள்வி மேல் கேள்வி போட்டு குழப்பி கொள்வேன். அதனால் தான் மிக சாதாரண மனிதன் என்றேன். காரணம் இருக்கிறது. இன்று மனிதனுக்கு ஆறாம் அறிவு இருப்பதாக ஒத்துக் கொள்கிறோம். அதுதான் அவனை விலங்கினங்களில் இருந்து பிரித்து வைக்கிறது என்றும் மார்தட்டிக் கொள்கிறோம். அப்போது விலங்கினமாக இருந்த மனிதன் தனது ஆறாம் அறிவை கொண்டு பகுத்து பார்க்க கற்று கொண்ட பின்னரே அவன் சாதாரண மனிதன் ஆகிறான். அவன் தன் கேள்விகளால் விஷயங்களை பகுத்து பார்க்க கற்று கொள்கிறான். விலங்குகளில் இருந்து விடுபட்டு கொள்கிறான். பெயரளவிலாவது. இந்த இரண்டு இனங்களுக்கு இடையில் தான் நான் மாட்டிக் கொண்டுள்ளேன். வேறு வார்த்தை தெரியாததால் மிக சாதாரணமான மனிதன் என்று சொல்லி கொள்கிறேன் .

தெரிந்து கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது என்பது என்னுடைய அனுமானம். கற்றது கையளவு என்பதில் ஐயளவும் சந்தேகம் இல்லாதவன் நான். என்னுடைய தேடல் வேறு. அந்த தேடலின் விளைவுகள் வேறு. ஆன்மிகத் தலை நகரமான திருவண்ணாமலையில் தான் பிறந்தேன். அப்போது தொடங்கிய தேடல். இன்னும் தேடி கொண்டுதான் இருக்கிறேன். பல தரப்பட்ட மனிதர்கள். பல தரப்பட்ட பிரச்சினைகளுடன் வாழ்வதை பார்க்கும் போது அட என்னடா வாழ்க்கை இது, என்று எண்ண தோன்றியது. சிறிது சலித்தாலும் அது என்னை வாழ்க்கையின் மைய கருத்தை கிளற தூண்டியது. அதற்கு நான் கொடுத்த விலைகள் அதிகம். இன்னமும் பதிலுக்காக தான் அலைந்து கொண்டு இருக்கிறேன்.

வாழ்க்கை என்பது என்ன? எதற்காக?வாழ்க்கையில் நாம் எதை நோக்கி ஓடி கொண்டு இருக்கிறோம்? கடவுள் என்பது யார்? அவர் எப்படி இருப்பார்? உண்மையில் இருக்கிறாரா? அப்படி இருந்தால் அநியாயம் என்று இந்த உலகம் சொல்லும் ஒரு விஷயத்தை செய்யும் மனிதர்கள் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்களே? மற்றவர்களை துன்புறுத்தி வாழ்ந்து கொண்டு இருக்கிறார்களே.. வஞ்சம், பொறாமை, போட்டி, கபட நாடகங்கள் என்று இருக்கின்றனரே.. உண்மையில் வாழ்பவர்கள் உலகத்தில் வாழ தகுதி இல்லாதவர் என்று ஒதுக்க படுகின்றனரே.. இதை இந்த விதிகளை வடிமைத்தது யார்? அது தான் கடவுளா? அவர் இப்படி தான் இருப்பாரா? இன்று அவர் பேர் சொல்லி ரத்தம் சிந்திய எத்தனையோ பேர் இருக்கின்றனரே.. உண்மையில் வாழ்க்கையில் வெற்றி என்பது என்ன? பொருள் வெற்றி அடைந்தவரிடம் நிம்மதி பெரும்பாலும் இல்லையே.. அட என்ன இது? குழப்பம் பிடித்ததாக இருக்கிறதே.. என்று நான் குழம்பாத நாள் இல்லை , இடம் இல்லை. உலகம் எனக்கு வாழ தகுதியில்லாதவன் என்று பெயர் சூட்டியது. அப்போது உண்மையில் தகுதி உடையவர் யார்?

கேள்விகளின் கனங்கள் எப்போதும் என்னை வாட்டியது உண்டு. என்னிடம் பேசும் நபர்கள் கடந்த பன்னிரண்டு வருடமாக இதை பற்றி என்னோடு கலந்தலோசித்தது உண்டு. அவைகளின் பிணையல் தான் இந்த ஆத்ம விசாரணை. என்னுடைய கேள்விகளும் அவர்களுடைய கேள்விகளும், அதற்கு என்னுடைய பதில்களும், அவர்களுடைய பதில்களும் என்று வாழ்க்கையில் சுவாரஸ்யம் காட்டின. அவற்றின் தொகுப்பாக எனக்கு நினைவு வரும் வரை இந்த வலை தொகுப்பில் தர முயற்சி செய்ய போகிறேன்.

நான் ஆன்மீகத்தை மட்டுமே எடுத்துரைக்கும் ஆன்மீகவாதி இல்லை. உண்மையை கண்டறிய நான் செய்த பயணத்தின் விளைவுகளை எடுத்து சொல்ல மட்டுமே முயற்சி செய்கிறேன். தமிழ்நாட்டு பதினெண் சித்தர்கள் முதல் ஜென் தத்துவம், டா இசம், என்று நான் அரைத்ததை இதனை படிப்பவர்களை அசை போட வைக்கிறேன். இது தான் முடிவு என்று நான் சொல்லவே இல்லை. இது ஒரு பாதை. இதுவும் ஒரு பாதை. எதை நோக்கி இந்த பாதை என்பது மட்டுமே மறு கேள்வியாக வந்து நிற்கிறது. இவர்தான் கடவுள் என்று நான் காட்டி விட்டால் என்னையே கடவுள் ஆக்கி விடும் உலகம் இது.

பைய படிக்கவும். மெய்யுணர்ந்து வாசிக்கவும். இவ்வளவே என்னால் சொல்ல முடியும். என்னோடு கலந்துரையாடிய நண்பர்கள் பொதுவாக என்னை  உட்கார்ந்து பேச வைத்த இடம், டீக்கடை, பேருந்து நிறுத்தம், வீட்டு மொட்டை மாடி என்று நாம் எப்போதும் அதிகம் புழங்கும் இடம் தான். இந்த இடங்களில் நான் அதை பேசும் போது, இங்கு இருக்கும் மற்றவர்களும் இதே தேடலோடு இருப்பார்களோ என்று எண்ணுவேன். அதன் விளைவு தான் இந்த தொகுப்பு. இன்னும் சரியாகவே தொகுக்கவே இல்லை. தொகுத்தால் முடிந்து விடும் தானே. இல்லை நான் ஆரம்பித்து தான் இருக்கிறேன்.

No comments:

Post a Comment